நேற்று காலை நாகை மாவட்டம் அருகே கரையை கடந்த கஜா புயல் பெரும் சேதங்களை உண்டாக்கி சென்றது. குறிப்பாக நாகை, தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியில் உள்ளனர்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் முன் அந்த பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் செய்துள்ளனர். புயலால் பாதிகப்பட்ட தங்களுக்கு குடிநீர், உணவு வழங்க கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் தங்கள் பகுதிகளை உடனடியாக பார்வையிடவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அதிராம்பட்டினம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் வர இன்னும் 3 நாட்கள் என்ற அறிவிப்பும் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த மின்வாரிய அதிகாரிகள் அதிராம்பட்டினம், வேதாரண்யம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் மின்சார கம்பங்கள் பெருமளவில் சேதம் அடைந்துள்ளது. இரண்டு ஊர்களிலும் புதிதாக மின் இணைப்பு கொடுக்கும் நிலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் மின்சாரம் வர இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர்.