வெளிநாட்டில் சட்டவிரோதமாக சிம்கார்டுகளை விற்பனை செய்த நபரை திருச்சியில் சைபர் கிரைம் போலீசார் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் என்ற பகுதியை சேர்ந்த முகமது ஜமீல் என்பவர் இந்தியாவிலிருந்து சிம்கார்டுகளை வாங்கி மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி வெளிநாட்டில் இருந்து கொண்டே தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள மக்களிடம் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் புகார் உள்ளது.
இந்த நிலையில், முகமது ஜமீல் சமீபத்தில் திருச்சி வந்ததாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்த நிலையில், அவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இருந்ததாகவும், இந்திய மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் இருந்த நிலையிலும் அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை அவர் எத்தனை சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ளார், யார் யாருக்கு விற்பனை செய்துள்ளார், அந்த சிம்கார்டுகள் மூலம் என்னென்ன குற்றங்கள் நடந்து உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.