கோவையில் ப்ராங்க் வீடியோ செய்து தொல்லை கொடுப்பவர்களின் சேனல் முடக்கப்படும் என கோவை காவல்துறை எச்சரித்துள்ளது.
ஸ்மார்ட்போன் வளர்ச்சியால் இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் யூட்யூபில் வீடியோ பார்ப்பவர்கள் எண்ணிக்கையும், யூட்யூப் சேனல்களும் அதிகரித்துள்ளன. யூட்யூப் சேனல்கள் தொடங்கும் இளைஞர்கள் பார்வையாளர்களை கவர்வதற்காக ப்ராங்க் என்னும் கேலி செய்யும் வீடியோக்களை அதிகம் செய்கின்றனர்.
பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் அவர்களை தொந்தரவு செய்யும் வகையில் இளைஞர்கள் ப்ராங்க் வீடியோ செய்வது பிரச்சினைக்குரிய காரியமாக மாறியுள்ளது. முக்கியமாக கோயம்புத்தூர் பகுதியில் புற்றீசல் போல கிளம்பியுள்ள பல யூட்யூப் சேனல்கள் ப்ராங்க் என்ற பெயரில் மக்களை தொல்லைப்படுத்தி வருவதாக புகார்கள் அதிகரித்துள்ளது.
இதனால் யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கோவை மாநக காவல்துறை ”கோவை மாநகரில் எவரேனும் பிராங்க் வீடியோ எடுத்த என்ற விதத்தில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டால் அவர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்படுவதுடன், அவர்கள் யூட்யூப் சேனலும் முடக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது.