தமிழ்நாடு முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அரசியல் கட்சியினராலும், மக்களாலும் கொண்டாடப்படுகிறது.
சுதந்திரத்திற்கு பின் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளே செல்வாக்கு பெற்றிருந்த சமயம் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கி தமிழ்நாட்டில் முதன் முதலில் மாநில கட்சி ஒன்றின் ஆட்சிக்கு வித்திட்டவர் சி.என்.அண்ணாதுரை என்னும் அறிஞர் அண்ணா.
அறிஞர் அண்ணா அவர் காலத்தில் செய்த சாதனைகள் சில
1967ல் முதல்வராக பொறுப்பேற்ற அண்ணா அதுவரை மெட்ராஸ் என்று இருந்த மாநிலத்தின் பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றி பெயரிட்டார்.
சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாவதற்கான அரசாணையை நிறைவேற்றினார்.
நாடு முழுவதும் இந்தி மொழி படிப்பது கட்டாயமாக்கப்பட்டு மும்மொழி கொள்கை அமலில் இருந்தபோது, தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் படித்தால் போதும் என இருமொழி கொள்கையை கொண்டு வந்தார்.
பேருந்து சேவைகள் அரசுடைமை ஆக்கப்பட்டு போக்குவரத்துக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
ஏழைகளுக்கு பி.யு.சி வரை இலவச கல்வி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
கலப்பு திருமணம் செய்து கொள்வோரை ஊக்கப்படுத்த தங்க விருதுகள் வழங்கப்பட்டன.
1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தினார்.
சென்னை கடற்கரை சாலையில் திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், ஔவையார் உள்ளிட்ட தமிழ் சான்றோர்களுக்கு சிலை நிறுவப்பட்டது.
அரசு அலுவலகங்கள் எந்தவித மத கடவுளர் படங்களும் இல்லாமல் நீக்கப்பட்டது.
விதவை திருமணம் செய்து கொள்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தார்.
இவை மட்டுமல்லாமல் அண்ணா மறைந்த பின் சென்னையில் நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 1.5 கோடி மக்கள் கலந்து கொண்டனர். இன்று வரையிலும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட தலைவரின் இறுதி ஊர்வலமாக அவரது இறப்பும் சாதனையாகவே தொடர்கிறது.