ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இளையராஜாவுக்கு ஆண்டாள் கோவிலில் முழு மரியாதை அளிக்கப்பட்டது என்றும், இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் வழிபட்டு மன நிறைவுடன் சென்றார் என்றும் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், கோவில் நிர்வாகம் சார்பில், இளையராஜா மற்றும் மூன்று பேருக்கு ஆண்டாள் சூட்டிய மாலை, பட்டு வஸ்திரம் கட்டி மரியாதை செய்யப்பட்டதாகவும், அங்கு நடந்த இசை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டு நிகழ்ச்சியை உங்களுடன் சேர்ந்து இளையராஜா கண்டுக்களித்ததாகவும் கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜீயர்களுடன் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றபோது வசந்த மண்டபத்தை தாண்டி அர்த்த மண்டப வாசல் அருகே நின்றார். அப்போது, கோயில் அர்ச்சகர் சின்ன ஜீயரிடம், வசந்த மண்டபத்தில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறியவுடன், இளையராஜாவும் அங்கேயே நின்று சாமி தரிசனம் செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.