ஆன்லைன் ரம்மி மோகம்; காசு தராததால் கோபம்! – சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (13:20 IST)
கன்னியாக்குமரியில் ஆன்லைன் ரம்மி விளையாட காசு தராத விரக்தியில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு கீதா என்ற பெண்ணுடன் திருமணமாகி 14 வயதில் சஜன் என்ற மகனும் உள்ளார். ராஜ்குமார் சவுதியில் பணியாற்றி வரும் நிலையில் கீதா தனது மகனுடன் கருமன்கூடலில் வசித்து வருகிறார்.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் சஜன் வீட்டில் இருந்ததால் செல்போனில் ஆன்லைனில் ரம்மி போன்ற சூதாட்டங்களை விளையாடி வந்துள்ளான். அதுபோக அதில் பணம் செலுத்த தனது தாயிடமும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளான். ஆனால் தாய் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சஜன் செல்போனை தூக்கி வீசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.

பிறகு வீட்டின் அருகே உள்ள வாழைத்தோப்பில் விஷமருந்தி மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவன் உயிரிழந்துள்ளான். ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்