ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

Siva

ஞாயிறு, 30 மார்ச் 2025 (11:29 IST)
கள்ளக்குறிச்சி அண்ணாநகரைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ.க நகரத் தலைவர் சூரிய மகாலட்சுமி, தனது கணவர்  சிவக்குமார் என்பவருடன் இணைந்து, ஏலச்சீட்டு வழியாக மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கங்கா என்ற நபர், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ரஜத் சதுர்வேதியிடம் புகார் அளித்தார்.
 
இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துமணி தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் மற்ற போலீசார் இணைந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 2017 ஆம் ஆண்டு முதல், சிவக்குமாரும், சூரியமகாலட்சுமியும் தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக தெரியவந்தது. அண்ணாநகர், ஏமப்பேர் பகுதிகளைச் சேர்ந்த பலர், மாதந்தோறும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சீட்டில் பணம் செலுத்தி வந்தனர்.
 
2017 முதல் 2022 வரை, அவர்கள் சீட்டு வாங்கியவர்களுக்கு சரியான முறையில் பணத்தை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் 2023 முதல், சூரியமகாலட்சுமியும், சிவக்குமாரும் சீட்டு கட்டியவர்களுக்கு அவர்களுக்குச் செல்ல வேண்டிய தொகையை வழங்காமல், பணத்தை தக்கவைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியபோது, பணத்திற்கான வட்டித் தொகையை வழங்குவதாகவும், ஒரு முறை முழுத் தொகையையும் செலுத்துவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். மேலும், தனியார் நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொண்டு, அதை அதிக வட்டிக்கு வழங்கியும் ஈட்டியுள்ளனர்.
 
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு திடீரென இருவரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 54 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.2 கோடியே 60 லட்சத்து 66 ஆயிரத்து 867 ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. தலைமறைவாகி இருந்த இருவரையும் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
 
சமீபத்தில், இருவரும் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார் அங்கு சென்று இருவரையும் கைது செய்தனர். மேலும், இந்த மோசடியில் மற்றவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்