சென்னையில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்த நிலையில், இன்று காலையும் மழை பெய்து கொண்டிருப்பதை அடுத்து, மழைநீர் முக்கிய சாலைகளில் தேங்கி இருப்பதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் நேற்று இரவு மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு 7 மணிக்கு மழை தொடங்கியது. அதன் பின்னர், ஒன்பது மணிக்கு மேல் கனமழை பெய்தது என்பதும், இதனால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் மழைநீரால் மூழ்கியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, கோயம்பேடு மெட்ரோ சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி இருப்பதாகவும், சாலையில் ஒரு அடிக்கு மேல் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதுபோல், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரக்கூடிய வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மழைநீர் தேங்கி இருப்பதால் பாதிக்கப்பட்டதாகவும், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்திலும் அதிக அளவில் மழைநீர் தேங்கி இருப்பதால் மெட்ரோ பணிகளும் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றி வருவதாகவும், இதனால் இயல்பு நிலை படிப்படியாக தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.