பாம்பன் அருகே 4 கிராமங்களில் உள்வாங்கிய கடல்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Mahendran

வெள்ளி, 17 ஜனவரி 2025 (16:58 IST)
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன்  பகுதிகளில் திடீரென கடல் உள்வாங்கியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்செந்தூர், புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் அவ்வப்போது கடல் உள்வாங்கும் நிகழ்வு நடக்கும் என்றாலும், பாம்பன் பகுதியில் கடல் உள்வாங்குவது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள தோப்புக்காடு, சின்னப்பாலம், முந்தல்முனை, தரவை தோப்பு ஆகிய நான்கு கிராமங்களில் திடீரென 500 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றதாகவும், அந்த படகுகளை மீட்க முடியாமல் மீனவர்கள் அவதிப்பட்டதாகவும் தெரிகிறது.

கடல் உள்வாங்கியதன் விளைவாக அந்த பகுதியில் உள்ள நண்டு, சங்கு, சிற்பி, நட்சத்திர மீன் போன்ற கடல் உயிரினங்கள் வெளியே தெரிய வந்ததாகவும், அவற்றை நாய்களும் காகங்களும் சேர்ந்து சாப்பிட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த பகுதியில் கடல் பகுதி அதிக சீற்றத்துடன் காணப்பட்டதாகவும், தற்போது திடீரென 500 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்