தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

Mahendran
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (15:37 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாட்டின் காரணமாக, இன்று முதல் செப்டம்பர் 25 வரை தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளது.
 
அடுத்த 2 நாட்களுக்கு, தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சாதாரண நிலையை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக சில இடங்களில் அசவுகரிய சூழல் ஏற்படக்கூடும். 
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
 
இன்று காலை சென்னை புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது, இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது. ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி போன்ற இடங்களிலும் இன்று மழை எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்