இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இன்று விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையில் இறங்கி சாதனை படைத்துள்ளது.
சந்திரன் பற்றிய ஆராய்ச்சியில் இதற்கு முன்னதாக உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா, சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி அங்கு நீர் உள்ளதாக கண்டறிந்தது.
இதையடுத்து, சமீபத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பிய நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
இன்று மாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது குறித்த நேரலை ஒளிபரப்பு 5.44 மணி முதல் தொடங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது.
இதனால் ஒட்டுமொத்த இந்தியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.
தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: வாழ்த்துகள் இஸ்ரோ. சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. சந்திரனின் மேற்பரப்பை தொட்ட 4 வது பெரிய நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது. அயராத முயற்சி மற்றும் புதுமைக்காக உழைத்த குழுவிற்கும் பாராட்டுகள்… இந்தியா விண்வெளி ஆய்வில் ஒரு மாபெரும் பாய்ச்சல் என்று தெரிவித்துள்ளார்.