ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை..

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (09:22 IST)
மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகிறார்கள்.


 

 
சமீபகாலமாக வருமான வரித்துறையினர் பல அரசியல் பிரபலங்களின் வீடுகள்  மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 6 மணியில் இருந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
 
ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரத்தில் ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக ப.சிதம்பரம் லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது. அதேபோல், வெளிநாட்டு முதலீட்டை குறைத்துக் காட்டியதாக கார்த்திக் சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  ரூ.4 கோடி மட்டுமே அந்நிய முதலீடாகப் பெறப்பட்டது என கார்த்திக் சிதம்பரம் தரப்பில் கணக்கு காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் எனத் தெரிகிறது. மேலும், இந்த சோதனை இன்று மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, டெல்லி, நொய்டா உள்ளிட்ட 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்