ஓ.பி.எஸ்.க்கு உள்ள முக்கிய நெருக்கடி இதுதான்! - சுட்டிக்காட்டும் திருநாவுக்கரசர்

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (16:22 IST)
ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அவருக்கு முக்கியமான சிரமம் டெல்லி நெருக்கடிதான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.


 

இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடத்தில் பேசிய திருநாவுக்கரசர், ”ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டத்தில் திமுக வன்முறையை தூண்டியதாக முதலில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இப்போது நடராஜன் கூறி இருக்கிறார். அது தவறு.

மாணவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக போலீசார் திட்டமிட்டு வன்முறையை ஏவினார்கள். தமிழ்நாட்டில் பயங்கரவாதம் ஊடுருவி விட்டதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். அப்படியானால் மத்திய அரசு உளவு துறை மூலம் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டியதுதானே?

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சில நடவடிக்கைகள் பாராட்டும்படியாக உள்ளன. ஆனால் அவருக்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக ஆட்சியின் மூலமாகவும், தீபா மூலமாகவும் பாஜக நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

அதிமுகவில் அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதெல்லாம் அவர்களது உள்கட்சி பிரச்சினை. யாரை எங்கே உட்கார வைக்க வேண்டும் என்பதெல்லாம் அவர்கள் சார்ந்த வி‌ஷயம்.

ஆனால் அவர் ஒரு முதலமைச்சர். அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அவருக்கு முக்கியமான சிரமம் டெல்லி நெருக்கடிதான்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்