பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசிவந்த அமமுக, தமாக மற்றும் ஓபிஎஸ் அணி ஆகியோர் இன்று பாஜக தமிழக அலுவலகமான கமலாலயத்தில் சென்று கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
மக்களவை தேர்தலுக்கான தேதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முழு வேகத்தை எட்டியுள்ளன. ஏற்கனவே பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பேச்சுவார்த்தையில் இருந்து வந்த அமமுக, தமாக மற்றும் ஓபிஎஸ் அணியினருடன் ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது பாஜக.
தற்போதைய தகவலின்படி டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு 2 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் முழுவிவரம் பின்னர் அறிவிக்கப்படும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் தமாக, ஓபிஎஸ் அணியினருக்கும் தலா 2 சீட்டுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் ஜி.கே.வாசன் என கட்சி தலைவர்கள் பல பாஜக தமிழக அலுவலகமான கமலாலயத்துக்கு விசிட் அடித்ததால் அப்பகுதியே தொண்டர்களால் கலகலப்பாக மாறியுள்ளது.