ரூ.4.87 கோடி பதுக்கல் வழக்கிலும் அன்புநாதனுக்கு முன்ஜாமீன்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (09:53 IST)
கரூரில் ரூ. 4 கோடியே 77 லட்சம் பணத்தை பதுக்கி வைத்திருந்தது தொடர்பான வழக்கிலும், அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
 

 
கரூர் மாவட்டம், அதிமுக பிரமுகரான நிதி நிறுவன அதிபர் அன்புநாதன் வீட்டில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அங்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.
 
அப்போது, 4 கோடியே 87 லட்சத்து 33 ஆயிரம் ரொக்கம், 11 பணம் எண்ணும் இயந்திரங்கள், கள்ள நோட்டு கண்டுபிடிக்கும் இயந்திரம், வாக்காளர் பட்டியல் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 
இதுதொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே அன்புநாதனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது. எனினும், மண்மங்கலம் வட்டாட்சியர் அம்பாயிரநாதன் அளித்த புகாரின் பேரில் அன்புநாதன் மீது வருமான வரிச்சட்டத்தின் படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இதனால், அன்புநாதன் மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”பள்ளியில் தாளாளராக இருந்து வரும், தன் மீதுதொழில் போட்டி காரணமாக யாரோ அனுப்பிய மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் பறக்கும்படை போலீஸார் தனது வீடு, கிடங்கில் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தான் முறையாக வருமான வரி செலுத்திவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
 
மேலும் வருமானவரிச் சட்டத்தின் கீழ்புகார் அளிக்க வட்டாட்சியருக்கு அதிகாரம் கிடையாது என்பதுடன், வருமானவரி ஆணையரின் முன் அனுமதி பெறாமல் விசாரணை நடத்த முடியாது என்று அவர் கூறியிருந்தார்.
 
நேற்று திங்களன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி வேலுமணி, அன்புநாதன் மீதான 2வது வழக்கிலும் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 
அன்புநாதன் தினமும் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், அவர் கீழ் நீதிமன்றத்தில் 2 வாரத்திற்குள் ஆஜராகி முன்ஜாமீனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்