வரலாறு தெரியாமல் விமர்சிக்கும் அண்ணாமலை - ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (21:14 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அண்ணாமலை கூறியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து, எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அதில், ''இப்படிப்பட்ட உலகம் போற்றும் உன்னதத் தலைவரை, மறைந்தாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒப்பற்ற தலைவரை, இந்தியத் திருநாடே வியந்து பார்த்த வீரம் மிக்க தலைவரை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாம் புரட்சித் தலைவி அம்மா அவர்களையும், அவருடைய ஆட்சியையும் தரக்குறைவாக திரு. அண்ணாமலை அவர்கள் விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
 
மாண்புமிகு அம்மா அவர்களின் 1991-1996 ஆண்டு ஆட்சி முடிவடைந்தவுடன், மாண்புமிகு அம்மா அவர்களை அரசியலிலிருந்து ஓரம் கட்டவேண்டும் என்ற தீயநோக்கத்தின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களால் பொய் வழக்குகள் பல புனையப்பட்டன.
 
அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் மாண்புமிகு அம்மா அவர்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த மண்ணை விட்டு விண்ணுலகத்திற்கு சென்றபோது அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
 
அவர் நிரபராதியாகத்தான் இந்த மண்ணை விட்டுச் சென்றார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம்.
 
உண்மையை உணராமல், மனம் போன போக்கில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில்  திரு. அண்ணாமலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் ''என்று எச்சரித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்