இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணை எங்கே? அன்புமணி கேள்வி!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (13:20 IST)
இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணை எங்கே? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளில் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் விசைத்தறி நெசவாளர்கள் போதிய வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்!
 
பொங்கலுக்கு தலா 1.80 கோடி வேட்டி, சேலைகள் வழங்கப்பட வேண்டும். அவற்றில் தலா 30 லட்சம் கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், மீதமுள்ளவை விசைத்தறி மூலம் தயாரிக்கப்பட வேண்டும். அதற்கான பணிகளை இப்போது தொடங்கினால் தான் பொங்கலுக்குள் முடிக்க முடியும்!
 
வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணை வழக்கமாக ஜூன் மாதம் வெளியிடப்படும். ஆனால், இப்போது ஆகஸ்ட் மாதம் ஆகியும் அரசாணை வெளியிடப்படாததால், நடப்பாண்டில் தங்களுக்கு வேலை கிடைக்காதோ? என்ற ஐயம் நெசவாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இது போக்கப்பட வேண்டும்!
 
எனவே, இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணையை வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி விசைத்தறி சங்கங்களுக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்