300 பவுன் நகை திருட்டில் நடிகர் செந்திலின் உறவுக்காரப் பெண் சிக்கியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் செந்திலின் உறவினரான பூபதி ராஜா சென்னையில் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். பூபதிராஜாவின் மனைவி சண்முகவடிவு தனது தங்கை உமாவிடம் 300 பவுன் நகைகளை கொடுத்து அதனை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி லாக்கரில் வைக்க சொல்லியிருந்தார்.
விஷேசங்கள் வரும் போது அதனை எடுத்துக் கொடுக்கும்படி கூறியிருந்தார். அதன்படி விஷேசங்கள் போது பலமுறை லாக்கரில் இருந்து எடுத்து நிகழ்ச்சி முடிந்தவுடன் லாக்கருக்கே அந்த நகைகள் சென்றுவிடும்.
இந்நிலையில் பூபதி ராஜாவின் மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், சண்முகவடிவு உமாவிடம் நகைகளை லாக்கரில் இருந்து எடுத்துக் கொடுக்கும்படி கூறியிருந்தார்.
அதன்படி உமா லாக்கரில் இருந்து நகைகளை எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது அவரிடம் இருந்து மர்ம நபர்கள் நகைகளை திருடிச் சென்றதாக உமா போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீஸார், சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அப்படி ஒரு சம்பவமே நடக்காததை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து போலீஸார் உமாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், உமா நகைகளை திருடி ஏப்பம்விட்டதை ஒப்புக் கொண்டார்.