கடந்த 2004ம் ஆண்டில் ஏற்பட்டு பல உயிர்களை வாரிச்சென்ற சுனாமியின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டில் விடுமுறையை கழிக்க, கிறிஸ்துமஸை கொண்டாட என உலக மக்கள் பலர் கடற்கரைகளில் முகாமிட்டிருந்த நேரம். டிசம்பர் 26ம் தேதி சுமத்ரா தீவுகள் அருகே 9.4 ரிக்டர் அளவில் உருவான பயங்கர நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்படுத்தியது. இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட தீவு நாடுகளை தாக்கிய சுனாமி அலைகள் இலங்கை, இந்தியாவிலும் மிக வேகத்துடன் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி என்பது பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலேயே அதிகமாக அறிந்திருக்கப்படவில்லை என்பதால் யாரும் அதை எதிர்பார்க்கவில்லை.
தமிழ்நாட்டில் சுனாமி தாக்கியதில் மீனவ மக்கள் அதிகம் வாழும் பகுதியான நாகப்பட்டிணம் அதிகமான உயிரிழப்பை சந்தித்தது. சுமார் 6 ஆயிரம் மக்கள் கடலின் ஆக்ரோஷத்தில் பலியானார்கள். தமிழகம் முழுவதும் கடல்பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
சுனாமி அலைகள் தாக்கி 20 ஆண்டுகளை கடந்து விட்ட போதும் மொத்த குடும்பத்தையும் சுனாமியில் இழந்து இன்னும் ஆறாத வடுக்களோடு பலர் வாழ்ந்து வருகின்றனர். இன்று சுனாமியின் 20ம் ஆண்டு நினைவு நாளில் பல பகுதிகளிலும் மக்கள் சுனாமியில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல பகுதிகளில் அஞ்சலி தெரிவிக்கும் விதமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
Edit by Prasanth.K