முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை: வலியுறுத்தும் வருமான வரித்துறை!

Webdunia
ஞாயிறு, 7 மே 2017 (17:09 IST)
சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்த தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வருமான வரித்துறை பரிந்துரை கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
கடந்த டிசம்பர் மாதம் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது வருமான வரித்துறை. அதில் ரூபாய் 138.5 கோடி பணமும் 157 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. மூட்டை கணக்கில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின.
 
மேலும் அங்கிருந்து முக்கிய டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம் குமாரும் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பெயர்கள் உள்ளதாகவும், பல கோடி ரூபாய் அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அதில் உள்ளதாக தகவல்கள் வருகிறது.
 
எனவே அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அந்த டைரியில் அன்றைய அமைச்சரும் தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்