ஊடகங்களிலும், தொலைக்காட்சியிலும் அதிமுக சார்பில் நான் தொடர்ந்து பேசுவேன் என ஆவடி குமார் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், அதிமுகவின் கொள்கைகள், தலைமைக் கழக முடிவுகள் உள்ளிட்டவற்றை ஊடகங்கள், செய்தி நிறுவனங்களுக்கு வழங்கும் செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமிக்கப்பட்டனர்.
பேராசிரியர் தீரன், கே.சி.பழனிசாமி, பாபு முருகவேல், மகேஸ்வரி, ஜே.சி.டி.பிரபாகர், கோ.சமரசம், கோவை செல்வராஜ், மருது அழகுராஜ், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன் ஆகிய 12 பேர் இனி வரும் காலங்களில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக சார்பில் கலந்து கொண்ட ஆவடி குமாரின் பெயர் இந்த பட்டியலில் இல்லை.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஆவடி குமார் “இதுபற்றி என்னிடம் யாரும் ஆலோசிக்கவில்லை. நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் பணியாற்றிய போது என்னுடைய எழுத்தை பாராட்டிய ஜெயலலிதா என்னை ஊடக விவாதங்களில் அதிமுக சார்பாக கலந்து கொள்ளுமாறு கூறினார். அதைத்தான் நான் பின்பற்றி வந்தேன். இப்போது வெளியாகியுள்ள பட்டியலில் என் பெயர் இல்லை. ஆனாலும் அது என்னை கட்டுப்படுத்தாது. நான் தொடர்ந்து ஊடக விவாதங்களில் கலந்து கொள்வேன். தலைமையின் முடிவை அவர்கள் மாற்றிக்கொள்வார்கள்” என தெரிவித்தார்.