காஸாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 50 பணயக் கைதிகள் மரணம் - என்ன நடந்தது?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (21:12 IST)
காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் துவங்கியதில் இருந்து, சுமார் 50 இஸ்ரேலியப் பணயக் கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாக அக்குழு கூறியிருக்கிறது.
 
இதுபற்றி, ஹமாஸ் ராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேய்தா கூறுகையில், இஸ்ரேலின் தாக்குதல்களின் விளைவாக, தங்கள் குழுவினரால் காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த சுமார் 50 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டனர், என்றார்.
 
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, பலரைக் கொன்று, மேலும் பலரைச் பேரைச் சிறைபிடித்துச் சென்றது.
 
அதற்கு பதிலடியாக இஸ்ரேல் காஸாவின்மீது வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல்கள் நடத்திவருகிறது. இதன் விளைவாகவே 50 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸ் கூறியிருக்கிறது.
 
 
 
ஹமாஸின் இந்தக் கூற்றுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை ‘எந்தக் கருத்தும் இல்லை’ என்று பதிலளித்திருக்கிறது.
 
பிபிசியால் இந்த எண்ணிக்கையையோ அவர்கள் வழங்கிய விவரங்களையோ சரிபார்க்க முடியவில்லை.
 
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் 224 பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் இதுவரை அடையாளம் கண்டுள்ளது.
 
பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் அரசாங்கம் மேலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் மக்கள் போராட்டம் நடத்தினர்
 
 
பல பணயக் கைதிகள், இஸ்ரேலின் விமானப்படை குறிவைத்துத் தாக்கும் காஸாவிலுள்ள ஹமாஸின் சுரங்கப் பாதைகளில் சிறைவைக்கப்பட்டிருக்கலாம்.
 
இந்த வாரத் தொடக்கத்தில் ஹமாஸ் குழுவினர் சிறைபிடித்திருந்த யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் என்ற இஸ்ரேலியப் பெண்ணை விடுவித்தனர். அவர் ஊடகங்களுக்குப் பேசியபோது, தான் ஈரப்பதம் மிக்க ‘சிலந்தி வலை’ போன்ற நிலத்தடிச் சுரங்கப்பாதையில் சிறை வைக்கப்பட்டிருந்ததாகச் சொன்னார்.
 
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பணயக் கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறுவது இது முதல் முறையல்ல. பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருப்பதால் இஸ்ரேலுக்கு ஏற்படும் நெருக்கடியையும் வேதனையையும் அக்குழு நன்கு அறிந்திருக்கிறது.
 
இதைத்தொடர்ந்து, நேற்று டெல் அவிவ் நகரில், பணயக் கைதிகளை மீட்க இஸ்ரேல் அரசாங்கம் மேலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றுகோரி இஸ்ரேல் மக்கள் மற்றொரு போராட்டம் நடத்தினர். பணயக் கைதிகளைக் குறித்து இஸ்ரேல் மக்களிடம் பொறுமையின்மை அதிகரித்து வருகிறது.
 
பணயக் கைதிகள் காப்பாற்றப்பட வேண்டிய நேரம் துரிதமாகக் கடந்து வருகிறது என்று அவர்கள் நினைக்கின்றனர்.
 
 
இந்த வார தொடக்கத்தில் ரஃபா எல்லை வழியாக காஸாவுக்குள் நுழையக் காத்திருக்கும் உதவி டிரக்குகள்
 
காஸாவில் விரைவாகத் தீர்ந்துவரும் உணவுப் பொருட்கள்
இந்நிலையில், காஸாவில் மனிதாபிமானச் சிக்கல்கள் தீவிரமடைந்து வருகின்றன என்று ஐ.நா.வின் உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
உணவு மற்றும் எரிபொருள் வேகமாகத் தீர்ந்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
 
மிகக்குறைந்த அளவிலேயே உதவிப் பொருட்கள் காஸாவுக்குள் வருவதாக ஐ.நா.வின் உதவி நிறிவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இதற்கான ஒரு காரணமாக எகிப்தின் ரஃபா எல்லையில் அளவுக்கதிகமான சோதனைகளும் அலுவல் முறைகளும் உதவிப்பொருட்களைச் சுமந்து செல்லும் வாகனங்களைத் தாமதப்படுத்துவதுதான் என்று ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
காஸாவுக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இந்தச் சோதனைகள் அவசியமென்றாலும், இன்னும் பல மடங்கு அதிகமான உதவிப் பொருட்கள் காஸாவுக்குள் அனுப்பப்படவேண்டும் என்கிறார் உலக உணவித் திட்டத்தின் தலைவரான சிண்டி மெக்கெய்ன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்