அதிமுகவில் தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவாகியதை அடுத்து அந்த அணிக்கு எம்எல்ஏக்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது.
தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் மீண்டும் அறிவித்ததை அடுத்து தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவில் மூன்றாவது ஒரு அணி உருவாகியது. இந்த அணியில் நேற்றே 11 எம்எல்ஏக்கள் இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதலே அதிமுக எம்எல்ஏக்கள் வரிசையாக தினகரனை அவரது வீட்டில் சந்தித்து தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் ஆகியோரும் சந்தித்து தங்கள் ஆதரவை தினகரனுக்கு வழங்கினர்.
இதுவரை தினகரனுக்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் அந்த அணிக்கு வந்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 134 அதிமுக எம்எல்ஏக்களில் ஓபிஎஸ் அணியில் 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போது தினகரன் அணியில் 25 எம்எல்ஏக்கள் உள்ளனர். மீதமுள்ள 97 எம்எல்ஏக்கள் தான் தற்போது எடப்பாடி அணியில் உள்ளனர்.
இந்த 97 பேரில் எத்தனை பேர் தினகரன் அணிக்கு வரும் காலங்களில் செல்வார்கள் என்பது தெரியவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இல்லாமல் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். இதனால் ஆட்சி கவிழும் அபாயமும் உருவாகியுள்ளது.