மருத்துவ குணங்கள் அடங்கிய நிலவேம்புவின் அற்புத பயன்கள்

Webdunia
நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும். பசி உண்டாக்கும். உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தருவதோடு உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத்  தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்.

 
நிலவேம்பு தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக விளைகின்றது. மருத்துவர்களில் முக்கியமாக விஷக்கடி மருத்துவம் செய்பவர்களின் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. அரிதாக சில இடங்களில் பயிர் செய்யப்படுகின்றது.
 
நிலவேம்பு முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கசப்புச் சுவை அதிகமான தாவரங்களில் நிலவேம்பு முக்கிய இடம் வகிக்கின்றது. இந்தத் தாவரத்தில் மெத்தைல் சாலிசிலிக் அமிலம் காணப்படுகின்றது.
 
காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3  நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும். முறைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
 
5 கிராம் அளவு நிலவேம்பு இலைத் தூளைக் காலையில் உட்கொள்ள வேண்டும் அல்லது 5 பெரியா நங்கை இலைகளுடன் 10  சீரகம் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். அல்லது வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3  நாள்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.
 
நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளவேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை இந்த தாவரத்திற்கு உண்டு.
 
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும்  உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்