எளிதில் கிடைக்கக்கூடிய குப்பைமேனி இலையில் இத்தனை மருத்துவ நன்மைகள் உள்ளதா...?

Webdunia
குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம்,  உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு  போன்றவை நீங்கும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், விஷபூச்சிகள் கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.
 
குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.
 
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.
 
குப்பைமேனி இலைச் சாற்றினை 4 துளிகள் அளவு நாக்கில் தடவலாம் அல்லது குப்பைமேனி இலையைக் காயவைத்துத் தூள் செய்து, 1/4 தேக்கரண்டி அளவு உட்கொண்டுவர கோழை வெளிப்படும்.


 
குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும். மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.
 
குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான  பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
 
குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி,  வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.
 
குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவை சம அளவாக எடுத்துக்கொண்டு, வாணலியில் ஒன்றாக விட்டு, சுண்டக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை மூட்டுவலியுள்ள பகுதிகளில் இதனை நன்றாகத் தேய்க்க மூட்டுவலி தீரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்