கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனையின் முன்னாள் டீன் சந்தீப் கோஷை, இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சிப் பெண் மருத்துவர் கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மேற்குவங்கத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாணவி மரணம் தொடர்பாக சஞ்சய் ராய் எனபவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
மருத்துவமனையின் டீன் சந்தீப் கோஷூவிடம் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், மருத்துவக் கல்லூரி தொடர்பான ஒப்பந்தங்களை வழங்க சம்பந்தப்பட்டவர்களிடம் 20 சதவீதம் லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து கடந்த வாரம் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.