வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 150-ஐ தாண்டி உள்ள நிலையில், அங்கு கனமழை தொடர்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்ற வரும் நிலையில், நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.
அவற்றில் 143 உடல்களின் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. 190 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். '91 பேரது நிலை தெரியவில்லை' என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாளாக இன்று மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாயமானோரை தேடுதல், உயிருடன் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கனமழை தொடர்வதால், வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில் தற்காலிக மரப்பாலம் அமைத்து ராணுவ மீட்புக் குழு முண்டக்கையை அடைந்துள்ளது. அங்கிருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 4 குழுக்களாகப் பிரிந்து 150 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளில் ஈடுபட கேரளாவில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் வந்தாலும் கூட நிபுணத்துவம், அனுபவம் நிறைந்தவர்கள் மட்டுமே மீட்புப் பணியில் அனுமதிக்கப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. மேலும், இன்று வானிலை முன்னேற்றம் இருந்தால் மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.