கேரளாவில் நேற்று அதிகாலை நிகழ்ந்த நிலச்சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது வந்துள்ள தகவலின் படி வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அது மட்டுமின்றி காணாமல் போனவரை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர்.
மேலும் வயநாடு சென்ற தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையை தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.