24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

Mahendran
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (17:30 IST)
தமிழக ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவு எடுக்கிறார் என்பது குறித்து 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தமிழக அரசு அனுப்பிய மசோதாக்கள் அரசியல் சாசனப்படி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இன்னும் 24 மணி நேரம் இருப்பதால், அதற்குள் பேசி முடிவெடுக்க ஆளுநர் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது என்பதும் தகவலாக வெளியானுள்ளது.
 
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப்பதிவு செய்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும், அரசியல் சாசன கடமையை நிறைவேற்றாமல் தாமதப்படுத்தி வருவதாகவும் தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது.
 
தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களில் இரண்டை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவிட்டதாகவும், மற்ற 10 மசோதாக்களை திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், பத்து மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில், ஆளுநர் எந்த அடிப்படையில் இந்த முடிவுகளை எடுக்கிறார் என்பது குறித்து இன்னும் 24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்