கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும் என சீன அரசு பதிலடி கொடுத்துள்ளது. இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். அதேசமயம், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தம் செய்வதாகவும் அவர் அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் தனது அதிரடியை தொடங்கியுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு போன்றவற்றுக்கு 15% கூடுதல் வரி விதிக்கப்படும். மேலும், எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு நிகராக பொருளாதார வளர்ச்சியில் முன்னேறியுள்ள சீனா, நேரடியாக அமெரிக்காவுடன் வர்த்தக போரில் ஈடுபட உள்ளதாக மறைமுகமாக அறிவித்துள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.