மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியர்களை அறைக்குள் பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் 133 ஆண்டுகள் பழமையான அரசு கல்லூரியில் மாணவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு, ஹோலி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. மார்ச் 7ஆம் தேதி நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சிக்காக 150 ரூபாய் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்று தெரிகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யும் வகையில் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் நேற்று திடீரென ஆசிரியர்களை அறைக்குள் பூட்டினர். மேலும் அந்த அறையில் இருந்த மின்சாரத்தையும் துண்டித்தனர். அதுமட்டுமின்றி, ஆசிரியர்களை நோக்கி கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
சுமார் அரை மணி நேரம் கழித்து, ஆசிரியர்கள் இருந்த அறையின் பூட்டை திறந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என்றாலும், மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.