கோவையில் கல்லூரி மாணவர்கள் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு ஐந்து மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தடுக்க காவல்துறைக்கு தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் கோவை முழுவதும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஐந்து மாணவர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டின் மாடியில் கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து, 22 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் தனியார் கல்லூரியில் படித்து வருபவர்கள் எனவும், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Edited by Siva