கேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (14:32 IST)
கேரளாவில் கனமழையின் காரணமாக, சிக்கித் தவித்து வரும் மக்களை, 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.  
 
முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  
 
மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர்.  கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாடெங்கும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. 
 
கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்று ஒரு நாளில் மட்டும் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் உள்ள மலப்புழா என்கிற இடத்தில் மக்கள் பலர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அங்கு விரைந்து வந்த மீட்புத் துறையினர்,  35 அடி நீள பாலத்தை விரைவாக கட்டி, முதிவர்கள், குழந்தைகளை மீட்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். உரிய நேரத்தில் காப்பாற்றிய அவர்களை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்