கர்நாடகா மாநிலம் தும்கூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் ஒருவரை போலீசார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயதான அந்த பெண் வீட்டில் சண்டைப் போட்டுவிட்டு சில தினங்களுக்கு முன்னர் இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 50 வயதான துணை ஆய்வாளர் உமேஷ் 11 மணியளவில் அந்த பெண்ணை பார்த்துள்ளார்.
தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஓடும் காரிலேயே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அந்த துணை ஆய்வாளர். 11 மணிக்கு காரில் ஏற்றிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் இறக்கிவிட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணின் தாய் காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையில் போலீசார் இறங்கினர், அப்போது பாதிக்கப்பட்ட பெண் தன்னை பலாத்காரம் செய்த காவலர் உமேஷை அடையாளம் காட்டினார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
காவலர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த காவல் வாகன ஓட்டுநரையும் கைது செய்திருக்கிறோம். தற்போது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.