கருத்துக் கணிப்புகளுக்கு மதிப்பு இல்லை..! மக்களவை பிளவுபடுத்த பா.ஜ.க முயற்சி..! மம்தா காட்டம்..!!

Senthil Velan
திங்கள், 3 ஜூன் 2024 (12:23 IST)
கருத்துக் கணிப்புகள் ஊடகங்களுக்காக சிலரால் இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டது என்றும் அவற்றுக்கு மதிப்பு இல்லை என்றும் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
பா.ஜ.க 350க்கும் மேல் இடங்களை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், கருத்துக்கணிப்பு குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இதுபோன்ற கருத்துக் கணிப்புகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்றார். 
 
கடந்த 2016, 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பதை நாங்கள் பார்த்துள்ளதாகவும்,  கணிப்புகள் எதுவும் உண்மையாகவில்லை எனவும் அவர் கூறினார். இந்த கருத்துக் கணிப்புகள் ஊடகங்களுக்காக சிலரால் இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டது,  அவற்றுக்கு மதிப்பு இல்லை என்று மம்தா விமர்சித்துள்ளார்.
 
மக்களவை பிளவுபடுத்துவதற்கு பா.ஜ.க முயற்சித்த விதம் மற்றும் இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பறிப்பதாக பொய்யான தகவலைப் பரப்பியது போன்றவற்றால் இஸ்லாமியர்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
 
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸும் பாஜகவுக்கு உதவியதாக நான் நினைக்கிறேன் என்றும் இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், மு.க.ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்றும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலையிடாத வரை அகில இந்திய அளவில் எந்தத் தடையும் இருக்காது என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்