திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இதற்கு முன்பு ஆதார் அட்டை காண்பித்தால் அறை வாடகைக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனி ஆதார் அட்டை மட்டும் போதாது; சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்கான டிக்கெட் காண்பித்தால் மட்டுமே அறை வாடகைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதி விஐபி தங்கும் இடங்களில் மட்டுமே அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. திருமலை திருப்பதி கோயில் நிர்வாகத்திடம் 7500 அறைகள் உள்ள நிலையில், அதில் 3500 அறைகள் பக்தர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. 1580 அறைகள் முன்கூட்டியே பதிவு செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள அறைகள் கோயிலுக்கு நன்கொடை தரும் பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த நிலையில், விஐபி அறைகளை சிலர் வாடகைக்கு எடுத்து, அதை வெளி ஆட்களுக்கு வாடகைக்கு விடுவதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, சுவாமி தரிசனம் செய்யும் டிக்கெட் இருந்தால் மட்டுமே விஐபி அறைகள் ஒதுக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.