மிசோரம் அருகே மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் பகுதிகளை இந்த ஆயுதக் குழுக்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனையடுத்து மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்து இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இதுவரை 200க்கும் மேற்பட்ட மியான்மர் ராணுவ வீரர்கள், இந்தியாவுக்குள் நுழைந்து தஞ்சம் அடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் இவர்களை மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் 184 மியான்மர் ராணுவ வீரர்களை இந்திய பாதுகாப்பு படையினர் அந்நாட்டிடம் ஒப்படைக்க தயாராக இருந்தனர். இந்த ராணுவ விரர்களை அழைத்து செல்வதற்காக மிசோரம் மாநிலத்தின் லெங்குபி விமான நிலையத்தில் மியான்மர் ராணுவ விமானம் தரை இறங்கியது. அப்போது அந்த விமானம் திடீரென விபத்திக்குள்ளானது.
விமானத்தில் விமானி உட்பட 14 பேர் இருந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர். 8 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.