தெலுங்கானா மாநிலத்தில் ஒருவர் சாலையில் பணத்தை கட்டு கட்டாக தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் பாலநகர் என்ற பகுதியைச் சேர்ந்த பானு சுந்தர் என்ற முப்பது வயது நபர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில், இவரது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பதிவு செய்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது வீட்டின் அருகில் உள்ள பகுதியில் 200 ரூபாய் நோட்டுக்களை சாலையோரம் வீசிவிட்டு, தன்னுடைய வீடியோவை பார்ப்பவர்கள் இதனை வந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், அந்த வழியாக சென்ற மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு பணத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், பானுசந்தர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரீல்ஸ் மோகத்தால் சாலையில் கட்டு கட்டாக பணத்தை வீசிய நபர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.