மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது மேற்குவங்க மாநிலமே கலவர பூமியானது. அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்தனர். மம்தாவும் பதிலடி கொடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். மேலும் மம்தா பானர்ஜி பிரதமராகவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் மேற்குவங்கத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த பாஜக இம்முறை 18 தொகுதிகளில் வென்றதோடு மம்தா கட்சிக்கு இணையான வாக்கு சதவிகிதத்தையும் பெற்றது.
அதுமட்டுமின்றி தேர்தல் முடிவுக்கு பின்னர் மம்தா கட்சியின் எம்.எல்.ஏக்களை இழுக்கும் வேலையிலும் பாஜக இறங்கியுள்ளது. இன்று கூட மம்தா கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்களும் 50 கவுன்சிலர்களும் பாஜக கட்சியில் இணைந்துள்ளனர்
இந்த நிலையில் வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் தான் கலந்து கொள்ளவிருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மாநில திட்டங்கள் நிறைவேற மத்திய அரசின் துணை தேவை என்பதால் மத்திய அரசுடன் இணக்கமான உறவை அவர் விரும்புவதாகவும், மோடியுடன் சமரசம் செய்யவும் அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது