ஐஸ்க்ரீமில் விஷம் வைத்து குடும்பத்தை கொன்ற கொடூரன்! – எல்லாம் இதற்காகதானா?

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (15:40 IST)
கேரளாவில் இளைஞர் ஒருவர் ஐஸ் க்ரீமில் விஷம் கலந்து தன் மொத்த குடும்பத்தையும் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் அல்பின் பென்னி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் உள்ளவர்களுக்கு இவர் ஐஸ்க்ரீம் வாங்கி வந்து தந்துள்ளார். அவரது 16 வயது தங்கை மேரி ஆசையாக அவர் தந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டுள்ளார். அவரது தந்தை மற்றும் தாய் அதை அதிகமாக உட்கொள்ளவில்லை.

இந்நிலையில் ஐஸ் க்ரீம் உண்ட சில மணி நேரங்களுக்குள்ளாக மேரி வாந்தி எடுக்க தொடங்கியுள்ளார். அவரது கண்கள் மஞ்சளாக மாறிய நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மஞ்சல் காமாலை இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து மேரியின் தந்தைக்கும் அதே மாதிரியான அறிகுறிகள் தெரிய வரவும் மேரியின் உடலை கூறாய்வு செய்ததில் அவர் சாப்பிட்ட பொருளில் எலி விஷம் கலந்து அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்த அல்பின் பென்னியை போலீஸார் சந்தேகம் கொண்டு விசாரணை செய்துள்ளனர்.

அதில் தனது குடும்பத்தை கொல்ல ஐஸ்க்ரீமில் விஷத்தை கலந்ததை அல்பின் ஒப்புக்கொண்டுள்ளார். சொத்துக்களை தான் அடைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாக அவர் கூறிய நிலையில், அவரது செல்போன் தகவல்களை சோதித்தப்போது இணையத்தில் எலிவிஷம் வைத்து கொல்வதற்கான வழிமுறைகளை அவர் தேடியதும் தெரிய வந்துள்ளது. சொத்துக்காக தன் சொந்த குடும்பத்தையே ஒருவர் விஷம் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்