அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இந்திய தூதர்கள் மற்றும் தூதரகங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கனடாவில் காலிஸ்தான் தீவிரவாத குழு தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தூதரக ஆட்களுக்கு தொடர்பு உள்ளதாக கனடா கருத்து தெரிவித்ததால் சர்ச்சை எழுந்து இரு நாடுகளுக்கு இடையே விசாவை நிறுத்தி வைக்கும் அளவுக்கு விவகாரம் பெரிதானது. பின்னர் விசா மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
அதை தொடர்ந்து லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய தூதர்கள், தூதரகங்கள் மீது சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிலர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சமீபத்தில் தூதரகம் மீது தீ வைக்க முயற்சி செய்யபட்டது. கனடாவில் கூட சமீபமாக தூதர்களுக்கு மிரட்டல்கள் வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், கனடாவில் காலிஸ்தான் அமைப்புகள் இந்திய தூதரகங்கள் மீது புகைக்குண்டுகளை வீசும் அளவிற்கு அந்நாட்டு அரசு அவர்களுக்கு இடம் அளித்துள்ளதாகவும், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய தூதரகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து அந்நாட்டு அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்றும் நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.