பெகாசஸ் உளவுபார்க்கும் செயலி குறித்து இந்து என். ராம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (16:02 IST)
பெகாசஸ் என்ற செயலி மூலம் பலரது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருப்பது தொடர்பாக தற்போது பதவியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்து என். ராம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 
இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு பார்க்கும் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்ட அல்லது இலக்கு வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொலைபேசி எண்கள் சில நாட்களுக்கு முன்பாக அம்பலமாயின. இந்தச் செயலி மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய அரசியல் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
 
பத்து நாட்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் 17 ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இது தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் தலைவர்கள், தேர்தல் வியூக வகுப்பாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் என பத்து மேற்பட்டவர்களின் தொலைபேசிகள்இந்த உளவுசெயலியால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
 
இந்த நிலையில், இது தொடர்பாக தி இந்து குழுமத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய இயக்குநர்களில் ஒருவருமான என். ராம், சென்னையின் ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தைச் சேர்ந்த சசிகுமாரும் இணைந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
 
பெகாசஸ் உளவு பார்க்கும் செயலிக்கான உரிமத்தை இந்திய அரசோ அல்லது இந்திய அரசின் ஏதாவது ஒரு அமைப்போ பெற்றிருக்கிறதா என்பதைத் தெரிவிக்கவும் அந்தச் செயலியை வைத்து எந்த ஒரு இந்தியக் குடிமகனாவது உளவு பார்க்கப்பட்டார்களா என்பதைத் தெரிவிக்கவும் இந்திய அரசுக்கு உத்தரவிடும்படிஅந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்