தேசத்தந்தை எனப்போற்றப்படும் மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு இந்துமகா சபையினர் கோவில் கட்டி பூஜை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோட்சே, காந்தியைக் கொன்ற குற்றத்திற்காக 1949-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டார். இந்த நாளை இந்துமகா சபையினர் தியாக தினமாக அனுசரித்து அவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள அகில பாரத இந்துமகா சபை அலுவலகத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பி, மாலை அணிவித்து, பூஜை செய்துள்ளனர்.
இந்து மகாசபையினரின் இந்த செயல் அங்கு சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குவாலியர் மாவட்ட நிர்வாகம் கோட்சேவிற்கு கோயில் கட்ட அனுமதி தரமறுத்த நிலையில், இந்து மகாசபையினர் தங்களது அலுவலகத்தின் உள்ளேயே சிலை எழுப்பி நேற்று அவரது நினைவு தினத்தை அனுசரித்துள்ளனர். கோட்சே சிலை எழுப்பி, பூஜை செய்தவர்களை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.