மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்.! சுதந்திர தின விழாவில் மத்திய அரசை சாடிய சித்தராமையா.!!

Senthil Velan
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (12:21 IST)
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். 
 
நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் நடந்த சுதந்திர தின விழாவில் அம்மாநில முதல்வர் சித்தராமையா தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது என்று குற்றம் சாட்டினார்.

அரசியலமைப்பு கோட்பாடுகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்றும் மக்கள் தீர்ப்புக்கு எதிரான கொல்லைப்புற அரசியலை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்றும் சித்தராமையா தெரிவித்தார். சமூகநலத் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தும்போது தேவையான நிதியை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று அவர் கூறினார். 
 
மத்திய அரசிடம் இருந்து தங்களுக்கு வர வேண்டிய நிதிக்காக மாநிலங்கள் நீதிமன்றங்களை நாடும் நிலை உள்ளது என்றும் மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி பெறும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, மாநிலங்கள் வளர்ச்சிக்காக மத்திய அரசு நியாயமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்