முதல்வர் மருந்தகம், தியாகிகள் ஓய்வூதியம்.. சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு..!

Mahendran

வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (10:39 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் நான்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் அதில் முதல்வர் மருந்தகம் தொடங்கப்படும் என்றும் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் கூறியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

78வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தேசிய கொடியேற்றி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

தமிழகம் உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் பெண்களுக்கான திட்டங்கள் பெண்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் நான்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புகள் பின்வருமாறு:

1. குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும்.

2. முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் காக்க, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் படை வீரர்கள் வங்கிகளில் ரூ ஒரு கோடி வரை கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படும்.

3. தியாகிகள் ஓய்வூதியம் ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக அதிகரிக்கப்படும்

4. வயநாடு சம்பவத்தின் எதிரொலியாக, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்