பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்திய நிலையில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க வந்த ரேவதி என்ற பெண் மரணம் அடைந்த நிலையில் அவரது மகனும் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தெலுங்கானா சட்டமன்றத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் மீது கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், அல்லு அர்ஜுன் இதற்கு தன்னுடைய புகழ் மற்றும் நற்பெயரை சீர்குலைக்கும் செயல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், நேற்று அல்லு அர்ஜுன் வீட்டின் முன் திடீரென மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த பூந்தொட்டிகளை உடைத்ததாகவும், அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் காவல்துறை கடுமையாக செயல்பட உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், இந்த விஷயத்தில் எந்த அலட்சியத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.