தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2006 --2011 தி.மு.க., ஆட்சியில் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்துக்கு அதிகமாக ரூ. 76 லட்சத்து 40 ஆயிரத்திற்கு சொத்து குவித்ததாகவும், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 44 லட்சம் அளவிற்கு சொத்து குவித்ததாகவும் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 2012ல் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து, சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன. இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கைகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, மீண்டும் விசாரணை நடத்தவும், விசாரணையை தினமும் நடத்தி விரைவில் முடிக்கவும் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.