மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அது தேவை இல்லை. மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும என காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார்.
மேலும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பாஜகவின் உண்மையான நிலை என்ன என்பது தெரிந்துவிடும் என்றும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் தேர்தல் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியும் வெற்றி பெற்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக முறைகேடு செய்ததின் மூலம் தான் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், காங்கிரஸின் கூட்டணி கட்சிகளான சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இதேபோல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற நிலையிலும், அந்த மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையில் வாக்குப்பதிவு நடந்ததை எந்த கட்சியும் குற்றம் சாட்டவில்லை.
வெற்றி பெற்ற மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறைகேடு நடைபெறவில்லை என்றும், தோல்வி பெற்ற மாநிலங்களில் மட்டுமே முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கூறுவதுஒருதலைபட்சமானது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.