மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய மூவரும் டெல்லி சென்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் 132 எம்எல்ஏக்களை பாஜக வைத்துள்ளதால், பாஜகவை சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகின்றனர். ஆனால், தற்போது முதல்வராக இருக்கும் ஷிண்டே அதே பதவியில் நீடிக்க விரும்புவதாகவும் தேசியவாத கட்சியை உடைத்து வந்த சரத்பவார் சகோதரர் அஜித் பவார், முதல்வராக முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய மூவரும் டெல்லி சென்றுள்ளதாகவும், இன்று அவர்கள் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, முதல்வர் பதவி குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாகவும் அனேகமாக இன்று மாலை, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
அனேகமாக, முதல்வர் பதவிக்கு தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்படுவார் என்றும், ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகிய இருவரும் துணை முதல்வர் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.