இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் இலங்கை காற்றாலை திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தமான நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கை அரசுடன் அதானி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்று திடீரென இலங்கையில் காற்றாலை அமைக்கும் முடிவை கைவிடுவதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இரண்டு காற்றாலை அமைக்கும் திட்டம் மற்றும் விநியோகத் திட்டத்திலிருந்து மரியாதைவுடன் விலகிக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் இலங்கை அரசு விரும்பினால் அந்நாட்டு அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவிக்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், இலங்கையில் உள்ள மன்னார் நகரம் மற்றும் பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் காற்றாலை அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் செய்தது. அதேபோல், கொழும்பில் 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள முனைய திட்டத்தையும் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களும் தற்போது கைவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.